சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து, கிராம் மீண்டும் ரூ.9,000ஐ தாண்டியது. சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 15ம் தேதி ஒரு பவுன் ரூ.68,880க்கு விற்பனையாகியது. அதிகபட்சமாக 8ம் தேதி பவுன் ரூ.73,040க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இம்மாதம் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி தங்கம் விலை முதல் முறையாக கிராம் ரூ.8,000ஐ தாண்டி 8,060க்கு விற்பனையானது.
ஏப்ரல் மாதம் 21ம் தேதி கிராம் ரூ.9,000ஐ தாண்டி ரூ.9,015 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, ஏப்ரல் இறுதியில் ரூ.9,000க்கு கீழ் குறைந்தது. பின்னர் மே மாதம் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை கிராம் ரூ.9,000க்கு மேல் இருந்தது. கடந்த மே 31ம்தேதி ஒரு கிராம் ரூ.8,920க்கும், ஒரு பவுன் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாரத்தின் முதல் நாளான நேற்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,950க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.71,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் மீண்டும் ரூ.110 உயர்ந்து கிராம் ரூ.9,060க்கும் பவுன் ரூ.72,480க்கும் விற்பனையானது. ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,120 அதிகரித்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.