சென்னை: நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று கூட்டுறவுத்துறையின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் சத்ய பிரதா சாகு மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் மற்றும் நுகர்வுப் பணிகள் எஸ்.பி.அம்ரித் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை சார்பில் 49 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது அதன் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் 1,10,000 கோடி ரூபாய் வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மட்டும் அல்லாமல் புதிய கால்நடைகள் வாங்க கடன் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பயனாளர்களுக்கு பயிர்க்கடன் வழங்க 17000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 ஆயிரம் பேர் கூட்டுறவு துறைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையில் அதனை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, நகை கடன் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது.
தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவது இல்லை. அதனால் மத்திய அரசு கொண்டு வரும் நகைக்கடன் புதிய விதிமுறைகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது. கூட்டுறவு துறை சார்பில் 60 பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 35-40 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முதல்வர் மருந்தகத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. நல்ல வரவேற்பு உள்ளது என்பதற்கான அடையாளம்தான் இந்த வளர்ச்சி.