சென்னை: நகைக்கடன் மீதான புதிய நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும் என ஆர்.பி.ஐக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள் தொகையில் 80 சதவீத மக்களுக்குமேல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள். இவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு அவசர தேவை ஏற்படின், அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து, நிலைமையை சமாளிக்கும் சராசரி மக்கள் ஆவார்கள். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நகை அடமானத்திற்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி, தங்களின் அவசர தேவைகளுக்கு, சொந்த நகைகளின் பேரில் அருகில் உள்ள கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, மக்கள் நலன் கருதி, இந்த புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, தனியார் நகை கடைகளில் வாங்கப்பட்ட தங்க காசுகளின் தரத்தையும் பரிசோதித்து தங்கக் கடன் வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
நகைக்கடன் மீதான புதிய நிபந்தனையை திரும்பப்பெற எடப்பாடி வலியுறுத்தல்
0