Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நகை கடன் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், விவசாயிகள் தங்கள் தொழிலை மேற்கொள்வதற்கும், கிராமப்புற மேம்பாட்டிற்கும் இன்றியமையாததாக விளங்குவது நகைக்கடன் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நகைக் கடனை பெற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பாரத ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், ஏற்கனவே இருந்த நடைமுறை தொடர்ந்தால்தான் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படும், எனவே நகைக் கடன் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மூதாதையர்கள் வைத்துவிட்டு போன தங்க நகைகளுக்கு எல்லாம் ஆதாரம் கேட்பது, தங்கத்தின் மதிப்பில் 75 விழுக்காடு மட்டுமே கடன் வழங்குவது, 24 காரட் தங்கத்திற்கும் 22 காரட் மதிப்பிலேயே கடன் வழங்குவது போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாத நெறிமுறைகளாக இருக்கின்றன என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். பொதுமக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கியால் அண்மையில் வெளியிடப்பட்ட நகைக் கடனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென்று ஒன்றிய அரசை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.