Sunday, June 15, 2025
Home செய்திகள்Banner News தனக்கு சொந்தமான ஆபரணம் தான் என்பதற்கு ஆவணம் கட்டாயம் நகை கடன் வாங்க 9 கடும் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் மக்கள் அதிர்ச்சி

தனக்கு சொந்தமான ஆபரணம் தான் என்பதற்கு ஆவணம் கட்டாயம் நகை கடன் வாங்க 9 கடும் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் மக்கள் அதிர்ச்சி

by Karthik Yash

மும்பை: தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குவதற்கு 9 வழிகாட்டு வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நகைக்கடன் வாங்கும் வாடிக்கையாளர், அடமானம் வைக்கும் நகை தனக்குத்தான் சொந்தம் என்பதற்கான ஆவணம் சமர்ப்பிப்பது கட்டாயம் என்பது உட்பட கடுமையான விதிமுறைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இது சாமானிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய, அவசர தேவைக்கு கைகொடுப்பவை தங்க நகைகள்தான். நகையை அடமானம் வைத்து எளிதாக கடன் பெற முடியும் என்பதால்தான், சாமானிய மக்கள் கூட நகை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், நகைக் கடன் வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி விடுத்துள்ள புதிய வரைவு வழிகாட்டு விதிகள், பொது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நகைகளை எவ்வாறு மதிப்பீடு செய்து கடன் தொகையை நிர்ணயிக்க வேண்டும், என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான இந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், அடமானம் வைக்கும் நகை, கடன் வாங்குபவருக்கு சொந்தமானதுதானா என்பதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அவ்வளவு எளிதில் நகைக்கடை கிடைக்க வழியே இல்லை என்ற நிலையை இது உருவாக்கியுள்ளது. இவ்வாறு மொத்தம் 9 வழிகாட்டு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:
* அடமானம் வைக்கும் நகைகளுக்கு அதன் மொத்த மதிப்பில் 75 சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும். வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உட்பட கடன் வழங்கும் அனைத்து அமைப்புகளுக்கும் இது பொருந்தும். அதாவது, ஒரு லட்சம் மதிப்புள்ள நகையை அடமானம் வைத்தால், அதிகபட்சமாக ரூ.75,000 மட்டுமே கடன் தொகை வழங்கப்படும்.
* நகைக்கடன் வாங்குவோர், அடமானம் வைக்கும் நகைக்கு தாங்கள் தான் உரிமையாளர் என்பதற்கான ஆவணத்தைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். நகை வாங்கியதற்கான ரசீதை சமர்ப்பிக்கலாம். இல்லாவிட்டால், அதற்கு இணையான ஆவணம் அல்லது எழுத்துப்பூர்வ உறுதி மொழியை தர வேண்டும். ஒரு வேளை, நகையின் உரிமை மீது வங்கி அல்லது நிதி நிறுவனம் சந்தேகித்தால், நகைக்கடன் வழங்க மறுக்கலாம்.
* நகைக்கடன் வழங்குவதில் வெளிப்படை தன்மையை பேணும் வகையில், நகையின் தூய்மையை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் பரிசோதனை செய்து, அதற்கான சான்றினை வழங்க வேண்டும். அதில், நகை மதிப்பீடு, கேரட்டில் தங்கத்தின் தூய்மை, கல் அல்லது சேதங்கள் இருந்தால் எவ்வளவு மதிப்பு கழிக்கப்பட்டுள்ளது என்பன போன்ற விவரங்கள் அந்த சான்றிதழில் இடம் பெறும். இதன் ஒரு நகல் கடன் வாங்குவோரிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு நகல் கடன் ஆவணத்துடன் இணைத்து வைக்கப்படும்.
* எல்லா வித தங்கமும் அடமானத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விதிமுறைளுக்கு உட்பட்டு நகைகள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள்தான் ஏற்றுக் கொள்ளப்படும். நகை என்ற பட்டியலில் வரையறை செய்யப்பட்டவை தவிர வேறு எதுவும் அடமானத்துக்கு ஏற்கப்பட மாட்டாது.
* தங்க நகைகளுக்கு கடன் வழங்குவதை போல் வெள்ளி பொருட்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம். இதன்படி, விதிகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு வெள்ளி நகை, வெள்ளி நாணயங்கள் மீது கடன் வழங்கப்படும். 925 தூய்மை உடைய வெள்ளியாக இருந்தால் தான் கடன் வழங்கப்படும்.
* நகை வாங்குவதற்காக நகைக்கடன் வாங்குவதாக இருந்தால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கடன் தொகை அனுமதிக்கப்பட மாட்டாது.
* அடமானம் வைக்கும் நகைக்கு 22 காரட் அடிப்படையில்தான் மதிப்பை கணக்கீடு செய்ய வேண்டும். ஒரு வேளை 22 காரட்டுக்கு குறைவான நகையாக இருந்தால், அதனை 22 காரட் மதிப்பீடாக மாற்றி கணக்கிட்டு கடன் தொகை எவ்வளவு வழங்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதுபோல் வெள்ளியையும் 999 தூய்மை அடிப்படையில் கணக்கிட்டு முடிவு செய்ய வேண்டும்.
* நகைக் கடன் பெறும் வாடிக்கையாளர் வங்கியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் அடமானம் வைக்கப்பட்ட தங்கத்தின் எடை, அதன் தூய்மை, மதிப்பு, கடன் செலுத்த தவறினால் எடுக்கப்படும் ஏல நடைமுறைகள், ஏலம் விடுவதற்கு முன்பாக கடனை அடைத்து நகையை மீட்பதற்கு வழங்கப்படும் கால அளவு, கடன் தொகையை விட அதிகமாக ஏலம் போனால் உபரி தொகையை வாடிக்கையாளரிடம் வழங்குவது, ஏல நடைமுறை போன்றவற்றுக்காக வசூலிக்கப்படும் செலவு விவரங்கள் அனைத்தும் முழுமையாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
* கடனை வாடிக்கையாளர் திருப்பி செலுத்திய பிறகு, 7 நாட்களுக்குள் அடமான நகையை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், அதற்கு மேல் தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளும், நாள் ஒன்றுக்கு ரூ.5,000 வீதம் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அல்லது நிதி நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி விடுத்துள்ள வரைவு வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

* 22 காரட் அடிப்படையில் மதிப்பீடு
நகைகளை 22 காரட் மதிப்பின் அடிப்படையில்தான் கணக்கிட வேண்டும் என ரிசர்வ் வங்கி விதி வகுத்துள்ளது. உதாரணமாக, 18 காரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.70,000 எனவும், 22 காரட் தங்கம் கிராம் ரூ.85,000 என வைத்துக் கொள்ளலாம். அடமானம் வைக்கப்படும் நகை 18 காரட் கொண்ட 10 கிராம் நகை என்றால், ரூ. 7 லட்சத்தை ரூ.85,000 ஆல் வகுக்கும்போது 22 காரட் மதிப்பிலான 8.23 கிராம்தான் வரும். இதன் அடிப்படையில் கணக்கிட்டு நகைக்கடன் முடிவு செய்யப்படும்.

* எல்லா நகைகளுக்கும் கடன் கிடைக்குமா?
ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகளில், நகை என வரையறை செய்யப்பட்ட தங்க ஆபரணங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நகைகள், கிண்ணம், தட்டு போன்ற தங்க பொருட்கள் உட்பட எதுவாக இருந்தாலும் வரையறை செய்யப்பட்ட பட்டியலில் வர வேண்டும். இதுபோல் குறிப்பிட்ட தங்க காசுகளுக்கு மட்டுமே நகைக்கடன் கிடைக்கும்.

* பொதுமக்கள் கொதிப்பு
ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ அவசரத்துக்கு உதவும் என்றுதான் தங்க நகைகளில் முதலீடு செய்கிறோம். ஆனால், ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. சொந்த நகைதான் என்பதற்கு ரசீது, ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் என்கின்றனர். தாய் வீட்டில் இருந்து சீதனமாக வந்த நகைகளுக்கும், பாரம்பரியமாக வீட்டில் வைத்துள்ள நகைகளுக்கும் எப்படி ஆவணத்தை காட்டுவது? இந்த விதிகளை அமல்படுத்தக் கூடாது. இல்லாவிட்டால், அநியாய வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய அவல நிலை ஏற்படும்.

அல்லது, அங்கீகாரமில்லாத அமைப்புகளிடம் அதிக வட்டிக்கு நகைக்கடன் பெற்று வட்டியும் கட்ட முடியாமல் நகையையும் மீட்க முடியாமல் தவிக்க வேண்டி வரும். இப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு நகைக்கடன் வாங்குவதற்கு பதில் நகையை விற்று விடலாம் என்ற எண்ணம்தான் ஏற்படும். இப்போது கூட சில வங்கிகளில் 8 கிராமுக்கு ஒரு கிராமை கழித்துக் கொண்டுதான் மதிப்பீடு செய்கின்றனர். இந்த நிலையில் புதிய விதிமுறைகள் நகைக்கடன் வாங்குவதே கடினம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

* தங்கக் காசாக இருந்தால் 50 கிராமுக்கு மேல் கடன் கிடையாது
வங்கி சாரா நிதி நிறுவன அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘ஒருவருக்கு அதிகபட்சமாக எவ்வளவு நகைக்கடன் வழங்கலாம் என்பதை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. தனிநபர்களுக்கான நகைகளுக்கு என தனிப்பட்ட கட்டுப்பாடுகள் அதில் காணப்படவில்லை. அதேநேரத்தில் ஒரு நபர் 50 கிராமுக்கு மேல் தங்கக்காசுகளை அடமானம் வைக்க முடியாது’’ என்றனர்.

* புல்லட் லோனுக்கு கணக்கீடு எப்படி?
மேலும், தொழில் முதலீடுக்காக கடன் வாங்கும்போது, அடமான நகை மதிப்பில் எந்த அளவுக்கு கடன் வழங்கலாம் என்பதை, வங்கிகளே நிர்ணயம் செய்து கொள்ளலாம். புல்லட் லோன் என்றால் (மாதாந்திர தவணை தொகை செலுத்த தேவையில்லை. நகையை மீட்க நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் மொத்தமாகவோ, பகுதிகளாகவோ பிரித்து கடனை திருப்பிச் செலுத்தலாம்) வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டிய கடன் தொகையை நிர்ணயிக்க வேண்டும். அசல் மற்றும் வட்டி சேர்ந்து மொத்த தொகை 75 சதவீத மதிப்புக்குள்தான் இருக்கும் என நகைக்கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi