சென்னை: நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். நகைக்கடன் குறித்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தற்போது நிதியமைச்சரின் தலையீட்டின் பேரில் நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எனவே புதிய விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகை கடன் விதி தளர்த்த பரிந்துரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; RBIயின் தங்கக் கடன்கள் தொடர்பான வரைவு வழிகாட்டுதல்கள் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மகிழ்ச்சி பதிலளித்துள்ளது.
விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் போன்ற சிறிய கடன் வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும், சரியான நேரத்தில் மற்றும் அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்வதும் எனது நிலையான கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சினையில் கொடுக்கப்பட்ட நேர்மறையான பரிசீலனையைப் பாராட்டுகையில், ஏழைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய கொள்கைகள் மாநிலங்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசித்த பின்னரே எட்டப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.