திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து சென்றபோது மின்சார ரயிலில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பூங்கா நகர் சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவரது மனைவி புவனேஸ்வரி (34). இவர் கடம்பத்தூரில் உள்ள பிரபல வங்கியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை புவனேஸ்வரி திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கிருந்து கடம்பத்தூருக்கு 8.50 மணிக்கு சென்னையிலிருந்து திருத்தணி நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலில் அவர் பயணித்துள்ளார். அப்போது புவனேஸ்வரி தனது கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சரடு உள்ளிட்ட 5 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதனை ரயிலில் இருந்து இறங்கியபோதுதான் புவனேஸ்வரி உணர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.