சென்னை: எழும்பூரில் ஆம்னி பஸ்சுக்காக காத்திருந்த காரைக்குடி பகுதியை சேர்ந்த நகை வியாபாரியை கத்தி முனையில் காரில் கடத்தில் ரூ.31.50 லட்சம் பணம், 132 கிராம் தங்கம், வெள்ளியை பறித்து சென்ற 6 பேர் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(64). நகை வியாபாரியான இவர், காரைக்குடியில் சொந்தமாக நகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது நகைக்கடைக்கு தேவையாக நகைகளை வாங்க கடந்த 26ம் தேதி சென்னைக்கு வந்துள்ளார். பிறகு வேலை முடிந்து அன்று இரவு சொந்த ஊர் செல்ல வேண்டி, எழும்பூரில் உள்ள இருதய ஆண்டவர் தேவாலயம் முன்பு ஆம்னி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ரவிச்சந்திரனை கத்தி முனையில் திடீரென மிரட்டி காரில் ஏற்றி சென்றனர்.
காரிலேயே நகை வியாபாரியை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.31.50 லட்சம் ரொக்கம், 132 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ 250 கிராம் வெள்ளி நகைகளை பறித்து கொண்டு, போரூர் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நகை வியாபாரி போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு போலீசார் சம்பவம் நடந்த இடம் எழும்பூர் பகுதி என்பதால் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறியுள்ளனர். அதன்படி நகை வியாபாரி சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, நகை வியாபாரியை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியது உறுதியானது. அதைதொடர்ந்து மர்ம கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.