மும்பை: ரூ.538 கோடி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், கடன் தொகையில் மனைவிக்கு பல கோடி ரூபாய்க்கு நகை வாங்கி குவித்ததும், ஆடம்பர செலவுகள் செய்ததும் தெரிய வந்துள்ளது.கனரா வங்கியில் கடன் வாங்கி ரூ.538 கோடி மோசடி செய்தது தொடர்பாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் (74) கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் அமலாக்கத்துறை 11ம் தேதி வரை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்காக நரேஷ் கோயல், பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.6,000 கோடி கடன் தொகை, 2019ம் ஆண்டே வாராகடனாகி விட்டது. கடன் வழங்கிய வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி, எர்னஸ்ட் அண்ட் யங்க் நிறுவனம் மூலம் தணிக்கை செய்தது. அப்போது, கடன் தொகையில் ரூ.538 கோடி , கடன் வாங்கிய நோக்கத்துக்காக அல்லாமல் வேறு செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடன் மோசடி விவகாரத்தில்தான், 7 மணி நேர விசாரணைக்குப் பிறகு நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.
எர்னஸ்ட் அண்ட் யங்க் தணிக்கையை அடிப்படையாக வைத்தும் விசாரணையை அமலாக்கத்துறையினர் தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: யர்னஸ்ட் அண்ட் யங்க் தணிக்கை விவரங்களின்படி, கடந்த 2011- 12 நிதியாண்டில் இருந்து 2018- 19 நிதியாண்டு வரை பல்வேறு காரணங்களுக்காக ரூ.9.46 கோடி நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயலுக்கும், அவரது மகள் நம்ரதா கோயல், மகன் நிவான் கோயல் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை ஜெட் ஏர்வேஸ் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி, நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட கடன் தொகை தனிப்பட்ட ஆடம்பர செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மனைவிக்கு நகைகள் வாங்கியதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.12 கோடியை நரேஷ் கோயல் சிங்கப்பூரைச் சேர்ந்த ராஜ் ஓவர்சீஸ் நிறுவனத்துக்கு, அனுப்பியுள்ளார். 5 பரிவர்த்தனைகளாக இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இ-மெயில்களும் அனுப்பப்பட்டுள்ளன. இதில், நகை மட்டுமின்றி, ஆடம்பர பர்னிச்சர்கள், ஆடைகள் வாங்கி குவிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு கடன் தொகையில் இருந்து வேண்டுமென்றே பணத்தை மோசடியாக பரிவர்த்தனை செய்து கோடிக்கணக்கான மதிப்பில் மனைவிக்கு கோயல் நகை வாங்கிய விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் ரூ.1,000 கோடி பதுக்கல்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் நிபுணர்கள் மற்றும் கன்சல்டன்சிகளுக்கு பணம் கொடுத்ததாக சந்தேகத்துக்கிடமான வகையில் ரூ.1,000 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கணக்கில் காட்டாமல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தொகை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.