புதுடெல்லி: பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் ரூ.538 கோடி சொத்துகளை அமலாக்க துறை அதிரடியாக முடக்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டது. பெரிய அளவில் லாபம் ஈட்டி வந்த ஜெட் ஏர்வேஸ் திடீரென நஷ்டத்தை சந்தித்தது. இதனையடுத்து 2019ல் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் ஜெட் ஏர்வேஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார்.
அவருக்கு எதிராக கனரா வங்கி கடன் மோசடி புகார் அளித்திருந்தது. புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. நிறுவனத்தின் புரோமோட்டர்கள், இயக்குனர்கள் சேர்ந்து, கிரிமினல் கூட்டு சதியில் ஈடுபட்டனர். இதனால் வங்கியின் வராக்கடன் தொகை ரூ.538.62 கோடியாக உயர்ந்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தது.அவருக்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் 1ம் தேதி அவரை கைது செய்தது. பின்னர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்.
நரேஷ் கோயலுக்கு எதிராக மும்பை, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், வங்கிகளில் பெறப்பட்ட கடனை கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது தனிப்பட்ட செலவுகள் மற்றும் முதலீடுகளுக்காக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்நிலையில், இந்த வழக்கில் கோயலின் சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், முடக்கப்பட்டுள்ள சொத்துக்களில் 17 பங்களாக்கள் மற்றும் வணிக வளாகங்கள் அடங்கும். லண்டன், துபாய் மற்றும் நாட்டின் பல நகரங்களில் உள்ள இந்த சொத்துக்கள் நரேஷ் கோயல்,அவரின் மனைவி அனிதா, மகன் நிவான் பெயரில் உள்ளன. ஜெட் ஏர் பிரைவேட் லிமிடெட், ஜெட் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்களின் பெயரிலும் உள்ளன. இதன் மதிப்பு ரூ.538.62 கோடி ஆகும் என தெரிவித்துள்ளது.