விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 3 வீராங்கனை ஜெஸிகா பெகுலா (31), இத்தாலியை சேர்ந்த உலகின் 116ம் நிலை வீராங்கனை எலிசபெட்டா கோஸியெரெட்டோ (24) உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக ஆடிய எலிசபெட்டா, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும், அவரது ஆதிக்கமே நிலவியது. கடைசியில், அந்த செட்டையும் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அவர் கைப்பற்றினார்.
அதனால், கோஸியெரெட்டோ அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஜெஸிகா அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேறினார். நேற்று நடந்த மற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா வீராங்கனை டாரியா கஸட்கினா, சீன வீராங்கனை வாங் ஜிங்யு, செக் வீராங்கனை கேத்தரீனா சினியகோவா, ரஷ்ய வீராங்கனை லியுட்மிலா சாம்சனோவா உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர்.