மும்பை: ஜெட்டாவில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் புகைப்பிடித்த பயணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் சவேஜ் லியாகத் அலி (24) என்ற பயணி பயணித்தார். அவர் விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது சிகரெட் புகைப்பிடித்தார். அதிர்ச்சியடைந்த சக பயணிகள், விமான பணியாளர்களிடம் புகார் கூறினர். அதையடுத்து சவேஜ் லியாகத் அலியை எச்சரித்தனர்.
இருந்தும் அவர் அங்கிருந்து விமான கழிவறைக்கு சென்று, மீண்டும் புகைப்பிடிக்க முயற்சித்தார். பின்னர் அங்கிருந்த பணியாளர்கள், அவரை மீட்டு அவரது இருக்கையில் அமரவைத்தனர். இந்த விமானம் மும்பை வந்திறங்கியதும், விமான பயண விதிமுறைகளை மீறி புகைப்பிடித்த சவேஜ் லியாகத் அலி மீது சஹார் போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து சவேஜ் லியாகத் அலி மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் பஹ்ரைன்-மும்பை விமானத்தில் ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த பயணி ஒருவர் புகைபிடித்த விவகாரத்தில் சிக்கிய நிலையில், தற்போது இரண்டாவதாக மற்றொரு பயணி சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.