*கிரேன் மூலம் மீட்பு
ரெட்டிச்சாவடி : கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை அமைக்கும் பணியின்போது தென்பெண்ணை ஆற்றில் சிக்கிய ஜேசிபியை மீட்டனர்.கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆறு செல்கிறது.
தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த ஆண்டும் வரலாறு காணாத அளவிற்கு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கரையோர பகுதிகளான மேல்பட்டாம்பாக்கம், அழகியநத்தம், இரண்டாயிரவிளாகம், சின்னகங்கணாங்குப்பம், புதுச்சேரி பகுதிகளான குருவிநத்தம், சோரியாங்குப்பம், மணமேடு, கொமந்தான்மேடு ஆகிய பகுதிகளில் இருபுறமும் உள்ள கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளை நீர் புகுந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது.
அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தரைப்பாலம் முற்றிலும் சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டது. இதனால் புதுச்சேரி- கடலூர் செல்லும் வாகனங்கள் பல கி.மீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதையடுத்து தற்போது புதுச்சேரி அரசு சார்பில் கொமந்தான்மேடு கரைகளை பலப்படுத்தும் பணியும், சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தரைப்பாலம் முற்றிலும் சேதம் அடைந்ததால் அதனை சரி செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்ல மாற்றுப்பாதையாக ஆற்றின் குறுக்கே தற்போது மண் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சாலை அமைக்கும் பணி ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஜேசிபி இயந்திரம் ஆற்றில் மணலில் சிக்கிக்கொண்டது.
எவ்வளவோ முயற்சி செய்தும் வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்று மணலில் சிக்கிக்கொண்ட ஜேசிபி இயந்திரத்தை போராடி மீட்டனர். மாற்றுப் பாதை அமைப்பதற்காக சாலை அமைக்கும்போது ஜேசிபி இயந்திரம் ஆற்றில் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.