புதுடெல்லி: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையால் மட்டுமே அதானி மெகா ஊழல் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘அதானி மெகா ஊழல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கான கோரிக்கையானது ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிப்படுத்தியதை தாண்டியது. ஹிண்டன்பர்க் ஒரு சிறு துளி மட்டுமே.
அதானி குழுமத்துடன் தொடர்புடைய முறைகேடுகள் மற்றும் தவறுகள் அரசியல் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பரிமாணத்திலும் அரங்கேறி உள்ளன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், சிமென்ட் மற்றும் பிற முக்கியமான துறைகளில் அதானி நிறுவனம் அனுபவித்து வரும் ஏகபோகத்தை பாதுகாப்பதற்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. முந்த்ராவில் உள்ள அதானி ஆலை, நவி மும்பையில் உள்ள விமான நிலையம், உத்தரப்பிரதேச எக்ஸ்பிரஸ் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு கடன் வழங்குவதில் அரசு வங்கிகள் அதானி நிறுவனத்துக்கு அசாதாரண ஆதரவை காட்டுகின்றன.
அதானி நிறுவனங்களின் தேவைகளுக்கு இந்தியாவின் வெளியுறவு கொள்கை நலன்களை அடிபணிய செய்வதால் அண்டை நாடுகளில் இந்தியா தனது நிலைப்பாட்டை இழக்கிறது. இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவானது அதானி என்ற ஒரே நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கள் இவை எதைப்பற்றியும் கூறவில்லை. ஹிண்டன்பர்க் கூறியது ஒரு சிறு துளி தான். நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் மட்டுமே இந்த ‘மோதானி’(மோடி, அதானி) மெகா ஊழல் குறித்த உண்மைகள் வௌிக்கொண்டுவர முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.