சென்னை: காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சட்டமன்ற நாயகர்- கலைஞர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நாகப்பட்டினம் மீனவ பல்கலைக்கழகத்திற்கு வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பெயர் மாற்றப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் கருத்து தெரிவித்து வெளிநடப்பு செய்தார். ஆனால் நாங்கள் பெயர் மாற்றம் எதுவும் செய்யவில்லை.
ஒரு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தவறான தகவலை சட்டமன்றத்தில் பதிவு செய்யக் கூடாது. அவர்கள் மீது பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம். எதிர்கட்சியினர்தான் அதிக நேரம் பேசி இருக்கின்றனர் என்றார். இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச்செயலாளர் கி.சீனிவாசன், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.