தமிழ்நாடு போதைப்பொருள் விற்பனை மையமாக மாறியிருப்பதையும், அதற்கு தனது அமைச்சரவை சகாக்கள், தான் நம்பிய உயர் அதிகாரிகள் துணை போய் இருப்பதையும் சட்டம் ஒழுங்கு டிஜிபி அசோக் குமார் அளித்த அறிக்கையில் பார்த்து அதிர்ந்து போய்விட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. 2013 மே 8ல் நாம் தானே சட்டப்பேரவையில் குட்கா உள்ளிட்ட புகைப்பொருள் தயாரிப்பு, விநியோகம், விற்பனைக்கு தடை விதித்தோம். அந்த தடையை மீறி, உத்தரவை மீறி இத்தனை ஆண்டுகள் போதைப்பொருள் தங்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம். இன்னொருபுறம் தனது ஆட்சியையே ஆட்டம் காண வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் அந்த அறிக்கையில் இருந்ததால் ஆத்திரம் மறுபுறம். இதையடுத்து அறிக்கையை அனுப்பிய சட்டம், ஒழுங்கு டிஜிபி அசோக் குமார் கட்டாய விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு அறிக்கை தயாரித்து அளித்த சென்னை குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அருணாச்சலம் திருநெல்வேலி போக்குவரத்துகழக விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டார். 2016 செப்.2ல் அசோக்குமார் அறிக்கை ஜெயலலிதாவுக்கு அனுப்பப்படுகிறது. செப்.7ல் அசோக்குமார் கட்டாய ஓய்வில் அனுப்பப்படுகிறார். ஜெயலலிதா வெளியேற்றிய அசோக்குமார், உடனடியாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2014 நவம்பரில் டிஜிபி பதவி ஏற்ற அவருக்கு 2016 நவம்பர் 4ம் தேதி வரை பதவிக்காலம் இருந்தும் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்படுகிறார். புதிய டிஜிபியாக குட்கா டைரியில் பெயர் இடம் பெற்ற டி.கே. ராஜேந்திரன் நியமிக்கப்படுகிறார்.
இந்தபரபரப்பு அடங்குவதற்குள், 2016 செப்டம்பர் 22 அன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. 75 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்தவரின் உடல்நலம் மிகவும் மோசமாகி டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு காலமானார். ஜெயலலிதா மரணத்துடன், குட்கா வழக்கு தொடர்பான பரபரப்பும் அடங்கியது. கட்டாய விடுப்பில் சென்ற டிஜிபி அசோக்குமார் அறிக்கை மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பிறகு நான்கரை ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவரும், தமிழ்நாடு போதைப்பொருள் மையமாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டும் எடப்பாடி பழனிசாமியும் அதை கண்டுகொள்ளவில்லை. அதோடு டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு 2017 ஜூன் 30ம் தேதி முதல் மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அதுவும் அவர் பணிஓய்வு பெற இன்னும் அரை மணி நேரமே இருக்கும் நிலையில் நள்ளிரவு 11.30 மணிக்கு அவசர, அவசரமாக அப்ேபாதைய கவர்னர் வித்யாசாகர் கையெழுத்து பெற்று பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்றால் குட்கா வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை தெளிவாக புரியும். எடப்பாடி மட்டுமல்ல சிபிஐ, ஐடி அதிகாரிகளும் வழக்கை கிடப்பில் போட்டனர். அதன் மர்மம்தான் இன்று வரை யாருக்கும் புரியவில்லை.
ஆனால்… எதிர்க்கட்சியாக இருந்த திமுக அன்று விடவில்லை. தற்போதைய முதல்வரும், அன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குட்கா வழக்கு தொடர்பாக கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவைக்கே குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்று அதிரவைத்தார். ஆனாலும் எடப்பாடியும் அசையவில்லை, சிபிஐ, ஐடி அதிகாரிகளும் பதில் தரவில்லை. வேறுவழியில்லை.. நீதியின் பக்கம் சென்றார் மு.க.ஸ்டாலின். மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,’குட்கா வழக்கில் சென்னை மாநகரத்தின் முன்னாள் ஆணையர் ஜார்ஜ், தற்போதைய காவல்துறை தலைவர் ராஜேந்திரன், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதால் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை அப்போது சென்னை தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், வருமான வரித் துறை ஒரு பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது.
வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் முதன்மை இயக்குனர் சுசி பாபு வர்கீஸால் தாக்கல் செய்யப்பட்ட அந்த பிரமாணப் பத்திரத்தில், ‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் சோதனையிட்டபோது, குட்கா விவகாரத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், சில மூத்த காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் காவல்துறை தலைவர் அசோக்குமார் முதல்வருக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. வேதா நிலையம் இல்லத்தில் 2016 நவம்பர் 17ம் தேதியன்று இரவில் சோதனை நடத்தியபோது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு முன்னாள் டிஜிபி அசோக்குமார் 2016 செப்டம்பர் 2ம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு குட்கா விசாரணை தொடர்பாக எழுதிய கடிதம் கிடைத்தது. அத்துடன் வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் 2016 ஆகஸ்ட் மாதம் எழுதிய ரகசியக் கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது’ என்று வருமான வரித்துறை தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டது.
அந்த நேரத்தில் குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை எழுதிய கடிதமே இல்லை என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கூறியிருந்த நிலையில், வருமான வரித்துறை தாக்கல் செய்த இந்த பிரமாணப் பத்திரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில்,’ டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஏராளமான குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. குட்கா வழக்கில் ஒட்டுமொத்தமாக ரூ.39.91 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து முடித்த சென்னை உயர் நீதிமன்றம் 2018 ஜனவரி 30ம் தேதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது. 2018 ஏப்.26ம் தேதி குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது திமுக தொடர்ந்த வழக்கில் கிடைத்த வெற்றி. அதிர்ந்து போய் விட்டது அதிமுக கூடாரம். அடுத்து என்ன நடந்தது.. நாளை பார்க்கலாம்…