சேலம்: சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ், ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தார். கொடநாடு எஸ்டேட் வழக்கில் முக்கிய குற்றவாளியான அவர் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் பலியானார். இதையடுத்து கொடநாடு வழக்கில் ஆவணங்களை அழித்ததாக, அவரது அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். மேச்சேரியில் மின்வாரியத்தில் வேலை செய்து ஓய்வுபெற்ற வாசுதேவனுக்கு சொந்தமான 4 ஏக்கர் 7 சென்ட் த நிலத்தை அடகு வைத்து, பணம் வாங்கித்தருவதாக 14 பேர் கொண்ட கும்பல் அவரை அணுகி உள்ளது.
இதில் தனபால் புரோக்கராக செயல்பட்டுள்ளார். அதன்படி, 2020ல் வாசுதேவனிடம் நிலத்தை எழுதி வாங்கி ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி, ரூ.21.76 லட்சத்தை மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி ரூ.78.24 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதுபற்றி வாசுதேவன் அளித்த புகாரின் பேரில், மேச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து சசிகுமார், சேகர், ரவி, ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி புரோக்கராக செயல்பட்ட தனபாலை நேற்று போலீசார் கைது செய்தனர்.