நெல்லை: நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், நிர்வாகிகள் இருவரிடம் 2 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திசையன்விளை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மனித உரிமைத்துறை நிர்வாகி விவேக் முருகன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
4 அதிகாரிகள் கொண்ட 2 குழுவினர், இவர்களிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களின் பெயர்களை கேட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். கடந்த சில நாட்களாக ஜெயக்குமார் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதால் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.