சென்னை: மமக தலைவர் ஜவாஹிருல்லாவை எம்எல்ஏவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது உடல் நலம் குறித்து விசாரித்தார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏவுக்கு திடீரென உடல்நலம் குறித்த பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஒய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஜவாஹிருல்லா இல்லத்துக்கு நேற்று காலை நேரில் சென்றார். அவரை சந்தித்து நலம் விசாரித்தார். விரைவில் குணம் அடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தனது ஆவலை கூறினார். மேலும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.கே.மோகன் எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மமக மாவட்டம் தலைவர் ரசூல், மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக்முஹம்மது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்நனர்.