சென்னை: தமிழக சுற்றுலாத்துறை செயலர் சந்திர மோகன் கூறியதாவது: ஏலகிரியில் 30 சுற்றுலா பயணிகள் தங்கும் வகையிலும், கிளம்பிங் கூடாரம் போன்றவை அமைக்க ஐந்து ஏக்கர் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தினை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அடையாளம் கண்டுள்ளது. அதேபோல், இங்கு ரோப் வாக்கிங், படகு சவாரி, மற்றும் ஜிப்லைன் உள்ளிட்டவைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். மேலும், ஜவ்வாது மலையில் இயற்கையுடன் இணைந்து தங்களின் வாழ்க்கையை வாழும் மலை வாழ் மக்கள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு அவர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அறியும் வண்ணம் சுற்றுலா தலமாக இந்த மலையை மாற்ற முடிவு செய்துள்ளோம்.
அதேபோல், கொல்லி மலையின் அடிப்படை கட்டமைப்பு, பாதுகாப்பை மேம்படுத்த உள்ளோம். அங்கு இருக்கும் அருவிகளிலும் குளிக்கும் மக்களுக்கு உடைமாற்றும் அறைகள், கழிவறைகள் போன்றவை அமைக்கப்பட உள்ளன. இதுதவிர, மது அருந்திவிட்டு நீர்வீழ்ச்சியில் குளிப்பவர்களால் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த சுற்றுலா தலத்திற்கு வருவதை தவிர்க்கின்றனர். எனவே, இதனை முறைப்படுத்த உள்ளோம். கொல்லி மலையில் 12 ஏக்கர் பரப்பளவில் ரிசார்ட் மற்றும் உணவகங்களையும் அமைக்க உள்ளோம் இவ்வாறு அவர் பேசினார்.