பாரிஸ் ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நடப்பு ஒலிம்பிக்/உலக சாம்பியன் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா (26 வயது) இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்குகிறார். மொத்தம் 32 வீரர்கள் இரு பிரிவுகளாக தகுதிச்சுற்றில் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். இவர்களில் சிறப்பாக செயல்படும் 12 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். 84.00 மீட்டர் தூரத்துக்கு எறியும் வீரர்கள் நேரடியாக பைனலுக்கு முன்னேற முடியும்.
ஏ பிரிவு தகுதிச் சுற்று பிற்பகல் 1.50க்கு தொடங்குகிறது. நீரஜ் சோப்ரா இடம் பெற்றுள்ள பி பிரிவு போட்டி பிற்பகல் 3.20க்கு தொடங்கும். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜாக்கப் வாட்லெச் (33 வயது), இந்த முறையும் நீரஜுக்கு கடும் சவாலாக இருப்பார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் கவனம் ஈர்க்கிறார். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா ஏ பிரிவில் பங்கேற்கிறார்.
அமித் ரோகிதாசுக்கு ஒரு போட்டியில் தடை
கிரேட் பிரிட்டனுடன் நடந்த ஆண்கள் ஹாக்கி காலிறுதியில், இந்திய வீரர் அமித் ரோகிதாஸ் ‘அபாயகரமான ஆட்டம்’ காரணமாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு விதிகளின்படி அவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், ஜெர்மனியுடன் இன்று நடைபெற உள்ள அரையிறுதியில் அமித் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மகளிர் மல்யுத்தம் காலிறுதியில் போராடி தோற்றார் நிஷா
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 68 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை நிஷா தாஹியா காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார். ரவுண்ட் ஆப் 16ல் உக்ரைனின் டெடியானா சோவாவுடன் மோதிய நிஷா 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். காலிறுதியில் அவர் வட கொரிய வீராங்கனை பாக் சோல் கம்மிடம் போராடி தோற்றார்.
மனு பாக்கருக்கு கவுரவம்
மகளிர் துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்காக 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த மனு பாக்கர் (22 வயது), பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய குழுவினருக்கு தேசியக் கொடியேந்தி தலைமையேற்பார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. ‘இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரம். மூவர்ணக் கொடியேந்தி இந்தியக் குழுவினருக்கு தலைமை வகிக்கும் இந்த வாய்ப்பு என்றென்றும் நினைவில் பசுமையாக நிலைத்திருக்கும். இதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று மனு பாக்கர் தனது X வலைத்தள பக்கத்தில் தகவல் பதிந்துள்ளார்.