ஹாம்பர்க்: ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று, 2 கால் இறுதி ஆட்டங்கள் நடந்தன. முதல் காலிறுதியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியும், பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியாவும் மோதினர். முதல் செட்டை ஜாஸ்மின் 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டில் மியா கடும் சவால் அளித்த நிலையில், அந்த செட்டையும் 7-5 என கைப்பற்றி ஜாஸ்மின் பவுலினி வெற்றி பெற்றார்.
இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்விடா டெக்கும் ரஷ்யாவின் எகடெரினா அலெக்சாண்ட்ராவாவும் மோதினர். முதல் செட்டை இகா 6-4 என கைப்பற்றிய நிலையில் 2வது செட் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்றதும் தொடர்ந்த ஆட்டத்தில் இகா ஸ்விடாடெக் 2வது செட்டை 7-6 (7-5) என கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். இதன்மூலம் அரையிறுதிக்கு இகா ஸ்விடாடெக் முன்னேறினார்.