ஒசாகா: ஜப்பான் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இடது காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வரும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, போட்டியில் இருந்து வெளியேறியதால் அவருடன் மோத இருந்த ஜாக்குலின் கிறிஸ்டியன் அரை இறுதிக்கு முன்னேறினார். ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஒசாகா நகரில் நடந்து வருகின்றன. இதில் சிறப்பாக ஆடி வந்த ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 2வது சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்தை சேர்ந்த சூசன் லாமென்ஸ் உடன் மோதியபோது, 2வது செட் ஆட்டத்தில் காயம் அடைந்தார்.
மருத்துவ சிகிச்சை பெற்று இடது காலில் கட்டு போட்டபடி ஆடிய நவோமி, 3வது செட்டில் யாரும் எதிர்பாராத வகையில் அற்புத வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில், நவோமி, நேற்றைய காலிறுதிப் போட்டியில் ரோமானிய வீராங்கனை ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோத இருந்தார். ஆனால் காலில் பட்டிருந்த காயம் குணம் ஆகாததால், போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதனால், ஜாக்குலின் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நேற்று நடந்த மற்றொரு காலிறுதிப் போட்டியில் கனடாவின் லெய்லா ஃபெர்னாண்ட்ஸ், 7-6 (7-2), 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்லோவக் வீராங்கனை ரெபேகா ஸ்ரம்கோவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


