
பியாங்க்யாங்: கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு ஜப்பான், தென்கொரியா ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைகளை அனுப்பி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் வடகொரியா தனது ஏவுகணையை அனுப்பியது. எனவே தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அண்மையில் நடத்தின.
இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ஜப்பான் மற்றும் வடகொரியா நாடுகளிடையே உள்ள கடற்பகுதியில் நேற்று முன்தினம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகயை வடகொரியா சோதனை செய்தது. அந்த ஏவுகணைக்கு கவாசாங் 18 என பெயரிடப்பட்டுள்ளது. ஏவுகணை சோதனையை அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன், அவரது மகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர் என வட கொரிய செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை நடத்தியதற்காக வட கொரியாவுக்கு தென்கொரியா மற்றும் ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளன.