டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு ஜப்பானின் டோரிஷிமா தீவுக்கு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. எனினும் அந்த தீவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பதால் உயிர்ச்சேதம் இருக்காது என்று நம்பப்படுகிறது.
டோக்கியோவிற்கு தெற்கே 550 கிமீ (340 மைல்) தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜப்பான் தீவுகளில் 1 மீட்டர் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரப் பகுதிகள் மற்றும் ஆற்றின் முகத்துவாரங்களுக்கு அருகில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.