சென்னை: இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தமிழகத்திற்கு 15 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் ராமசந்திரன் பேசியதாவது: கொரோனாவிற்கு பிறகு 2021ம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023ம் ஆண்டில் 11,74,89 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு தற்போது 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டிற்கு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 15,49,10,708 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
* செப்டம்பரில் உலக சுற்றுலா தின விழா
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் www.tamilnadutourism.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், மலைகள், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், வனஉயிரிகள், அரண்மனைகள், நினைவகங்கள், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களின் புகைப்படங்கள், சுற்றுலாத்தலங்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் முக்கிய சுற்றுலாத்தலங்களின் மெய்நிகர் சுற்றுலாக்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள முகவரியை அனைத்து சுற்றுலா அதிகாரிகளும் தங்கள் மாவட்டங்களில் உள்ள மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், அவர்கள் மூலமாக வெளிநாடுகளில் உள்ள அவர்களது உறவினர்களிடமும் கொண்டு சேர்த்து, உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். குறிப்பாக, அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெற உள்ள உலக சுற்றுலா தின விழாவில் வழங்கப்பட உள்ள சுற்றுலா விருதுகளுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா பங்குதாரர்களும் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.