புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டத்தை பாஜ காப்பி அடித்து, அதற்கு விளம்பரம் செய்து கொள்கிறது என காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “2011ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஸ்வாபிமான் என்ற பெரிய நிதிச்சேர்க்கை திட்டத்தை கொண்டு வந்தது. இது 2012ம் ஆண்டில் நோ பிரில்ஸ் அக்கவுன்ட்ஸ்(அடிப்படை சேமிப்பு கணக்கு) என்ற அரசு பெயரை பெற்றது. 2013ம் ஆண்டில் நிதிச்சேர்க்கை திட்டத்தை 2016 வரை நீட்டிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னர் இந்த நிதிச்சேர்க்கை திட்டம் மோடி அரசால் ஜன்தன் யோஜனா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2013ம் ஆண்டிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நேரடி பலன் பரிமாற்ற(டிபிடி) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது 291 மாவட்டங்களில் எல்பிஜி மானியம் வழங்க ஆதாருடன் இணைக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜ ஆளும் மாநிலங்கள் இதை எதிர்த்தன. மோடியும் இதை எதிர்த்தார். இன்று அதே திட்டங்களை பெயர் மாற்றி அறிவித்து, அதனை விளம்பரப்படுத்துவதில் பிரதமர் மோடி பிசியாக இருக்கிறார்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் கார்கே தன் எக்ஸ் பதிவில், “மோடி அரசு வங்கிகளை பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் கருவியாக மாற்றி உள்ளது. காங்கிரசின் 3 கேள்விகள் : 1. 10 கோடிக்கும் அதிகமான ஜன் தன் வங்கி கணக்குகள் மூடப்பட்டுள்ளன என்பது உண்மையல்லவா? அதில் சுமார் 50% கணக்குகள் பெண்களின் கணக்குகள் அல்லவா? அந்த கணக்குகளில் டிசம்பர் 2023 வரை ரூ.12,779 கோடி டெபாசிட்கள் இருந்தன. மொத்த ஜன்தன் கணக்குகளில் 20% மூடப்பட்டதற்கு யார் பொறுப்பு?
கடந்த 9 ஆண்டுகளில் ஜன்தன் கணக்குகளின் இருப்பு ரூ.5,000க்கும் குறைவாகவே உள்ளது. சராசரி ரூ.4,325 என்பது உண்மையல்லவா? பாஜ ஆட்சியின் அதிகரிக்கும் பணவீக்கத்துக்கு மத்தியில் இந்த சிறிய பணத்தை வைத்து கொண்டு ஒரு ஏழை எப்படி வாழ முடியும்? பொது கணக்குகள் மற்றும் ஜன்தன் கணக்குகளை இணைத்து, 2018 முதல் 2024 வரை கூடுதல் ஏடிஎம் பரிவர்த்தனைகள், குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்கவில்லை என்ற தகவல்களை குறுஞ்செய்தி அனுப்பி மோடி அரசு ரூ.43,500 கோடி கொள்ளையடித்துள்ளது உண்மையல்லவா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்.