புதுடெல்லி: நாட்டில் அனைவரும் வங்கி கணக்கை தொடங்குவதற்காக கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பூஜ்ய பேலன்ஸ் வங்கி கணக்கை பராமரிக்க முடியும். அரசின் இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கே இல்லாத கோடிக்கணக்கானோர் புதிதாக வங்கி கணக்குகளை தொடங்கினார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளாகிறது. இது ஒரு முக்கியமான தருணமாகும். இந்த திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த திட்டத்தை வெற்றியடைய செய்வதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.