புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370ஐ பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 2ம் தேதியில் இருந்து தொடர்ந்து விசாரித்து வந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,‘‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தலாம் எனவும், அதற்கான அனைத்து பணிகளும் செய்தாகிவிட்டது. இருப்பினும் தேர்தல் ஆணையம் தான் அதற்கான தேர்தல் மற்றும் தேதியை அறிவிக்க வேண்டும். இருப்பினும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் விவகாரத்தில் அதற்கான கால வரையறையை சொல்ல முடியாது என ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைத்துள்ளது.