புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் மூன்று கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18ம் தேதி முதல் கட்டமாக 24 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜவின் மத்திய தேர்தல் குழு ஒன்று கூடி ஜம்மு காஷ்மீரில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை 44 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பாஜ வெளியிட்டது. இதனை தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரங்களில் இந்த பட்டியல் திரும்ப பெறப்பட்டது. இதனையடுத்து புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டும் இடம்பெற்று இருந்தது. அதன் பின்னர் வெளியான மற்றொரு பட்டியலில் ஒரே ஒரு வேட்பாளரின் பெயர் மட்டும் இருந்தது.
திரும்பபெறப்பட்ட பட்டியலில் ஜம்மு காஷ்மீர் பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னா, முன்னாள் துணை முதல்வர்கள் நிர்மல் சிங், கவீந்தர் குப்தா ஆகியோரின் பெயர்கள் விடுபட்டுள்ளது. பட்டியலில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் சகோதரர் தேவேந்திர ரானாவின் பெயர் இடம்பெற்று இருந்தது. இவர் தேசிய மாநாட்டு கட்சியில் இருந்து பாஜவில் இணைந்தவர். முதலில் வெளியான பட்டியலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி மற்றும் பாந்தர்ஸ் கட்சியில் இருந்து பாஜவில் இணைந்த பல முன்னாள் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. பட்டியல் வெளியான உடன் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியதால் பட்டியல் திரும்ப பெறப்பட்டு முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
* தேசிய மாநாட்டு கட்சி 51 காங். 32 இடங்களில் போட்டி 5 இடங்களில் நட்புரீதியில் மோதல்
காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ ஒரு அணியாகவும், பரூக்அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ஜேகேஎன்பிபி கட்சி ஆகியவை இணைந்து ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி ஒரு அணியாகவும் களம் இறங்குகின்றன. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முடிவுக்கு வந்தது. இதில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் 5 தொகுதிகளில் இருகட்சிகளும் நட்பு ரீதியில் வேட்பாளர்களை நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், ஜேகேஎன்பிபி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.