ஜம்மு: இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை இந்திய ராணுவப்படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் வரும் செப். 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு டங்கர், மச்சில் மற்றும் ரஜோரியின் லத்தி கிராமம் ஆகிய 3 இடங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை குப்வாரா மஜில் செக்டார் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் உஷாரான ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேபோல், குப்வாரா தங்தார் செக்டாரிலும் தீவிர சோதனையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி பலியானார். இந்த தகவலை இந்திய ராணுவம் உறுதிபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.