ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக இன்று திறக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. வைஷ்ணவ தேவி கோயிலுக்கான ஆன்மிக யாத்திரையும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சுற்றுலா துறைக்கு புத்துயிர் அளிக்கவும் சுற்றுலா பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஜம்மு காஷ்மீர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, முதல்வர் உமர் அப்துல்லா கடந்த மாதம் அமைச்சரவை கூட்டத்தை பஹல்காம் பகுதியில் நடத்தினார். அப்போது, சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க வேண்டும் என அமைச்சரவை அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இறுதி முடிவு எடுப்பதற்கான அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம் உள்ளது.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘காஷ்மீர் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சில சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளேன். பஹல்காமில் உள்ள பெடாப் பள்ளத்தாக்கு மற்றும் பூங்காக்கள், வெரினாக் தோட்டம், கோகெர்னாக் தோட்டம் மற்றும் அச்சபால் தோட்டம் ஆகியவை நாளை(இன்று) திறக்கப்படும்’ என தெரிவித்தார்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக இன்று திறக்கப்படுகிறது. பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன.