புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “ஜம்மு காஷ்மீரில் 87 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் 3.71 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு தேர்தல் மீது நம்பிக்கை உள்ளதை காட்டுகிறது. துப்பாக்கி தோட்டாக்களை விட வாக்குப் பெட்டிகள் மீது தம்பிக்கை அதிகம் இருப்பதை காட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 11,838 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பதற்றமான பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் இருப்பார்கள்.
90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு – காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். 3ம் கட்ட தேர்தல்: மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.
ஹரியானாவில் 2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். ஜம்மு, ஹரியானாவில் அனைவரையும் வாக்களிக்க வைப்பதே தங்கள் இலக்கு அனைத்து தரப்பு மக்களும் தேர்தலில் தங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும். ஹரியானாவின் தற்போதைய பாஜக அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஹரியானாவுக்கு அக்.1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.16 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். ஒரே கட்டமாக பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும்,”இவ்வாறு தெரிவித்தார்.