ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்கி முதல் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக கடந்த வெள்ளியன்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று உதம்பூர் மாவட்டத்தின் துது காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சில் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது திடீரென அந்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் போலீசாரின் ரோந்து வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் தீவிரவாதிகள் மற்றும் சிஆர்பிஎப், ஜம்மு போலீசார் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் குல்தீப் உயிரிழந்தார். இதனிடையே வீரர்கள் கொடுத்த கடுமையான பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் தீவிரவாதிகளும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.