காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீர் தேர்தலை முன்னிட்டு தால் ஏரியில் 3 மிதக்கும் வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். கடந்த 2014ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் கூடுதல் திட்டங்களை தேர்தல் ஆணையம் செயல்படுத்த உள்ளது. அந்த வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலேயே சிறப்பு வாக்குச் சாவடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக பிரபலமான ‘தால்’ ஏரியில் மூன்று மிதக்கும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
படகுகள் மூலம் வாக்குச் சாவடிக் குழுவினர் மிதக்கும் வாக்குச்சாவடியில் பணியாற்றுவார்கள். வாக்காளர்கள் அங்கு வந்து வாக்களித்துவிட்டு செல்வார்கள். கர் மொஹல்லா அபி கர்போரா என்ற மையத்தில் 3 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்காக சிறப்பு வாக்குச்சாவடி அமைய உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.