திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் 1433ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும் கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் வருவாய் தீர்வாய் அலுவலர்கள் நிர்ணயம் செய்தும் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம், வட்டாட்சியர் செ.வாசுதேவன் ஆகியோர் மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.குமார் கோரிக்கை மனு அளித்தார்.
அதில், அம்பேத்கர் நகர், கலைஞர் நகர் பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் வீட்டுமனை பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள வீடுகளின் மேல் மின்கம்பி செல்கின்றது. இதனால் மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்பட்டு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே அந்த மின்கம்பியை மாற்றி சாலை பக்கமாகவோ அல்லது வீடுகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்கம்பியை மாற்றி அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.