* கலெக்டர் வழங்கினார்
* 110 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பாபநாசத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது,தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தின் 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்,
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1434ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நேற்று முதல் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.
தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பராமரிக்கும் கிராம கணக்கு பதிவேடுகள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை தொடர்பான 138 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தீர்வாயத்தில் ஒரத்தநாடு வட்டத்தைச் சார்ந்த பொய்யுண்டார்குடிகாடு, நெம்மேலி திப்பியகுடி, தொண்டராம்பட்டு கிழக்கு, தொண்டராம்பட்டு மேற்கு, கண்ணுக்குடி மேல்பாதி முதன்மை, கண்ணுக்குடி மேல்பாதி கூடுதல், கண்ணுக்குடி கீழ்பாதி, ஆவிடநல்லவிஜயபுரம், வேதவிஜயபுரம், வெள்ளூர், ஆம்பலாப்பட்டு வடக்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு, இராமாபுரம், கோபாலபுரம், ஆம்பலாப்பட்டு, சிவக்கொல்லை, முள்ளூர்பட்டிக்காடு, பரவத்தூர்,
கொடியாளம், சோழகன் குடிக்காடு ஆகிய வருவாய் கிராமங்களில் வருவாய் தீர்வாயம் பசலி 1434-ல் ஏராளமான மக்கள் பட்டா, பெயர் மாற்றம் மற்றும் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். உடனடியாக இம்மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தின் 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) வருவாய்த் துறை சார்பில் 10 நபர்களுக்கு உடனடி தீர்வாக இணையவழி பட்டாவினை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
இதேபோல் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அய்யம்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட 21 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது.
இதில் பொதுமக்களிடமிருந்து 110 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த முகாமில் இரண்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையை சார் ஆட்சியர் வழங்கினார்.
ஜமாபந்தியில் பாபநாசம் தாசில்தார் பழனிவேல், சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் பாக்யராஜ், வட்டவழங்கல் அலுவலர் ஜானகிராமன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுமதி, வட்ட துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி , துணை வட்டாட்சியர்கள் அகிலா, பிராங்கிளின், சத்யராஜ், மணிகண்டன், தமயந்தி, வருவாய் ஆய்வாளர் கலாநிதி, கிராம அலுவலக சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலக முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ரமேஷ் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகள் என கலந்து கொண்டனர்.