*உடனடி நடவடிக்கைக்கு பரிந்துரை
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வந்த ஜமாபந்தி நிறைவடைந்தது. 15 நாள் முகாமில் 1291 மனுக்கள் பெறப்பட்டது. 196 பயனாளிகளுக்கு ரூ.49.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி, பர்கூர், ஓசூர், ஊத்தங்கரை மற்றும் அஞ்செட்டி ஆகிய வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி வட்டத்தில் வேப்பனஹள்ளி, ஆலப்பட்டி, குருபரப்பள்ளி, பெரியமுத்தூர், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய உள்வட்டங்களுக்குட்பட்ட 133 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது.
இந்நிகழ்ச்சியில, 133 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை கோரி 82 மனுக்கள், பட்டா மாறுதல் கோரி 282 மனுக்கள், பட்டா ரத்து செய்ய கோரி 37 மனுக்கள், கிராம கணக்கில் மாறுதல் செய்ய கோரி 12 மனுக்கள், தூசிமரம் உரிமைக்கோரி 5 மனுக்கள், நில அளவை சர்வே செய்ய 44 மனுக்கள், வீட்டுமனை பட்ட கோரி 344 மனுக்கள், நில தகராறு தீர்க்க ஒரு மனு, நில உடைமை பதிவு மேம்பாட்டு திட்டத்தில் திருத்தம் செய்ய கோரி 15 மனுக்கள், நிலப்பரப்பு வித்தியாசம் சரிசெய்ய 70 மனுக்கள், 0 மதிப்பு திருத்தம் செய்ய கோரி 2 மனுக்கள், பட்டா மாற்ற ஆட்சேபணை கோரி 4 மனுக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி 39 மனுக்கள், நில எடுப்பு செய்ய கோரி 4 மனுக்கள், நில அபகரிப்பு புகாருக்கான 4 மனுக்கள், புறம்போக்கு நிலத்தில் பட்டா கோரி 4 மனுக்கள், கிராம வரைபடம் கோரி 5 மனுக்கள், மயானம் கோரி 3 மனுக்கள்,
பல்வேறு சான்றிதழ்கள் வழங்க கோரி 22 மனுக்கள், புதிய குடும்ப அட்டைகள் கோரி 14 மனுக்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி 21 மனுக்கள், இதர துறைகளுக்கான 57 மனுக்கள் என மொத்தம் 1291 மனுக்கள் பெறப்பட்டது.
இவற்றில் பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா, இலவச வீட்டுமனை, இயற்கை மரண உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, இறப்பு பதிவு தாமத பதிவு உள்ளிட்ட 196 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. 39 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் கிருஷ்ணகிரி உள்வட்டத்திற்கு உட்பட்ட அகசிப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி, கட்டிகானப்பள்ளி, பையனப்பள்ளி, கம்மம்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி மற்றும் கோதிகுட்லப்பள்ளிக்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி உள்வட்டத்திற்குட்பட்ட 7 கிராமங்களை சேர்ந்த கிராம கணக்கு பதிவேடுகளான அ பதிவேடு, எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல் 1 ஏ உள்ளடக்கம், பட்டா மற்றும் புறம்போக்கு பதிவேடு, தனிபட்டா, சிட்டா மற்றும் அடங்கல் பண வரவு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகள் மற்றும் நில அளவை கருவிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வருவாய் துறை சார்பில் பி.எம்.ஜென்மன் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் 51 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 33 ஆயிரத்து 980 மதிப்பில் வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளும், 58 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், 41 பயனரிளகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், 1 பயனாளிகளுக்கு இறப்பு சான்றும் (தாமத பதிவு), மாவட்ட வழங்கல் துறை சார்பாக 25 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பாக 17 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகைக்கான காசோலைகள் என மொத்தம் 196 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 58 ஆயிரத்து 980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (நில அளவை) ராஜ்குமார், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் குருநாதன், தாசில்தார் சின்னசாமி, தனி தாசில்தார்கள் இளங்கோ, மகேஸ்வரி, வடிவேல், கிராம நிர்வாக அலுவலர் பூபதி, துணை தாசில்தார் வசந்தி, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் சம்மபந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை, பத்திர பதிவுத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.