ஜெய்பூர்: ஜல் ஜீவன் மிஷன் முறைகேடு தொடர்பாக ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி உள்பட 22 பேர் மீது ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பொதுசுகாதார பொறியியல்துறை அமைச்சராக மகேஷ் ஜோஷி பதவி வகித்து வந்தார். அப்போது ஒன்றிய அரசின் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மகேஷ் ஜோஷி தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களை வழங்குவதில் நிதி முறைகேடு மற்றும் ஊழல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இத்திட்டத்தில் நடந்ததாக கூறப்படும் பணமோசடி குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை மகேஷ் ஜோஷிக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தியது. மேலும் சில இடைத்தரகர் மற்றும் ஒப்பந்ததார்களை கைது செய்தது. இந்நிலையில் ஜல் ஜீவன் மிஷன் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி மற்றும் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்பட 22 பேர் மீது ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.