துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ஜெய் ஷா (35 வயது) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தொடர்ந்து 3வது முறையாக பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று பார்க்லே உறுதியாகத் தெரிவித்துவிட்டார். தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜெய் ஷா போட்டியின்றி தேர்வானார். பார்க்லே 2020-2022 மற்றும் 2022-2024 என தொடர்ந்து 2 முறை தலைவராக இருந்துள்ளார். புதிய தலைவர் ஜெய் ஷாவின் பதவிக்காலம் டிச.1ல் தொடங்குகிறது. ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், ஷஷாங்க் மனோகர் ஆகியோரைத் தொடர்ந்து ஐசிசி தலைவராகும் 5வது இந்தியர் என்பதுடன், இந்த பொறுப்பை ஏற்கும் மிக இளம் வயது நபர் என்ற பெருமையும் ஜெய் ஷாவுக்கு கிடைத்துள்ளது.