சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை ருத்ரப்பன் தெருவில் உள்ள ஜெயின் கோயிலுக்கு நேற்று காலை பெண்கள் சிலர் வழிபட சென்றனர். அப்போது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து செவ்வாய்பேட்டை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில், கோயிலில் வைக்கப்பட்டிருந்த சாமிக்கு அணிவிக்கப்படும் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம், வெள்ளி அங்கி, தட்டு உள்பட 25 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உண்டியல் உடைக்கப்பட்டு, சுமார் ரூ.10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த நபர் தனியாக வந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.