சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு 1,500 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திமுக தலைவராக 2018ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை தவிர்த்து, அறிவியக்கம் உருவாக்க புத்தகங்களை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதனையொட்டி, இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட சுமார் இரண்டு லட்சம் புத்தகங்களை தமிழ்நாடு மற்றும் அயலகத்தில் வாழும் தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் நூலகங்களுக்கு முதல்வர் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகளிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காகவும், அவர்களின் மனதில் நற்சிந்தனைகளை விதைக்கும் விதமாக, மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் உள்ள பார்ஸ்டல் பள்ளி ஆகியவற்றில் சிறை நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நூலகங்களில், பலவகையான புத்தகங்கள், பல்வேறு வகையான செய்தித்தாள்கள், வார மற்றும் மாத இதழ்கள் வைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளில் முதன்முறையாக சிறைத்துறை பங்கேற்று, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக பெற்றுள்ளது. மேலும், அனைத்து சிறைகளிலும் உள்ள சிறை நூலகங்களை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு 2023-2024ம் ஆண்டில் 2 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களில், புத்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும், சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்விற்கு இப்புத்தகங்கள் பேருதவியாக அமையும் என்பதை கருத்தில் கொண்டும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு வழங்கப்பட்ட 1500 புத்தகங்களை சிறை நூலகங்களுக்கு நேற்று நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உள்துறை முதன்மை செயலாளர் அமுதா, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை டிஐஜி ஆர்.கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.