பூந்தமல்லி: மத்திய ரிசர்வ் போலீசில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னையை அடுத்த திருநின்றவூர், சிடிஎச் சாலையைச் சேர்ந்தவர் மதுரைவீரன். இவருக்கு 2002ம் ஆண்டு ஆவடி அருகே மிட்டனமல்லி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த ஏழுமலை(65) என்பவரது அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏழுமலை ஆவடியிலுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வாங்கித் தருவதாக மதுரைவீரனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய மதுரைவீரன் உள்பட 10 பேர் ரூ.7.64 லட்சம் பணத்தை ஏழுமலையிடம் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏழுமலை ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏழுமலையை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சமீபத்தில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி ஸ்டாலின் பண மோசடி செய்த ஏழுமலைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6.34 லட்சம் பணத்தை வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தார். இதையடுத்து ஏழுமலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சரத்பாபு வாதாடினார்.