தமிழகத்தின் மிக அழகிய பகுதிகளில் ஒன்று ஆழியாறு. சுற்றிலும் மலைகள் வீற்றிருக்க ஒருபுறம் அணை கட்டப்பட்டிருக்கும். பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த அணையில் இருந்து சுற்றியுள்ள பல ஊர்களுக்கு பாசனத்திற்காக நீர் அனுப்பப்படுகிறது. அணையைப் பார்ப்பதற்கென்றே தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். வேதாத்திரி மகிரிஷி உருவாக்கிய அறிவுத்திருக்கோயிலும் இங்கு இருக்கிறது. ஆழியாறு தமிழகம் முழுக்க பிரபலம் அடைந்ததற்கு இந்த அறிவுத்திருக்கோயிலும் ஒரு முக்கிய காரணம். இத்தகைய சிறப்பு முக்கிய ஊரில் அமைந்திருக்கிறது சபாபதியின் ஓட்டைக்காடு தோட்டம். மலையடிவாரத்தில் ஓட்டைக்காடு என்ற கரடின் அருகில் அமைந்துள்ளதால் இந்தத் தோட்டத்திற்கு ஓட்டைக்காடு தோட்டம் என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். ஓட்டைக்காடு தோட்டம் என்றால் தெரிகிறதோ, இல்லையோ! விவசாயி சபாபதியை நன்றாக தெரிகிறது. சரியாக அறிவுத்திருக்கோயிலின் பின்புறம் அமைந்திருக்கிறது இவரது தோட்டம். அணையில் இருந்து வரும் ஒரு சிறு வாய்க்காலை ஒட்டி சென்றால் சில தோட்டங்கள் வருகின்றன. அவற்றில் ஒன்றாக அமைந்திருக்கும் சபாபதி தோட்டத்திற்குச் சென்றோம்.
“ எனக்கு இங்க 8 ஏக்கர் நிலம் இருக்குங்க. அப்பா, தாத்தான்னு எல்லோருமே விவசாயிங்கதான்.அப்பாவுக்கு அப்புறம் கடந்த 15 வருசமா நான் விவசாயம் பார்க்குறேன். 26 அடி இடைவெளியில தென்னை மரங்கள் இருக்கு. ஒவ்வொரு மரத்துக்கும் இடையில ஜாதிக்காய் வச்சிருக்கோம். அப்புறம் வரப்புகள்லயும் வச்சிருக்கோம். இந்த 8 ஏக்கர்ல மொத்தம் 500 தென்னை மரங்கள் இருக்கு. 400 ஜாதிக்காய் செடி இருக்கு. தென்னையில வர்ற வருமானம் தனி. ஜாதிக்காய்ல இருந்து வருசத்துக்கு 11 லட்ச ரூபாய் வருமானமா வருதுங்க’’ என்று மழைத்தூறல்களுக்கு இடையே பேசத் தொடங்கிய சபாபதியிடம் ஜாதிக்காய் சாகுபடி விபரங்களைக் கேட்டோம்.
“ ஜாதிக்காய் சாகுபடி செய்ய 3 அடி ஆழம், 3 அடி அகலம், 3 அடி நீளம்னு குழியெடுப்போம். இதை பொக்லைன் இயந்திரம் மூலமா எடுப்போம். குழியெடுத்து 15 நாளுக்கு ஆறப்போடுவோம். அதுக்கப்புறம் குழியில 2 அடிக்கு மேல்மண்ணை நிரப்பி, அதுக்கு மேல செடிகளை நடுவோம். மழைக்காலங்கள்ல நடவு செஞ்சா நல்லா இருக்கும். நடும்போது செடி வச்சிருக்கிற பிளாஸ்டிக் பேப்பரை அகற்றிட்டு நடணும். தண்ணி தேங்குற நிலமா இருந்தா மேட்டுப்பாத்தி அமைச்சி அதுல நடலாம். ஏன்னா இதுக்கு தண்ணி தேங்கி நிக்கக்கூடாது. அதேசமயம் ஈரமும் இருக்கணும். செடியை நடும்போது மட்கிய மாட்டுச்சாணத்தையும், மேல்மண்ணையும் கலந்து குழியில நிரப்புவோம். நட்டபிறகு சொட்டுநீர்க்குழாய் மூலமா உயிர்த்தண்ணீர் விடுவோம். அதுக்கப்புறம் தேவைக்கு ஏற்ற மாதிரி பாசனம் கொடுப்போம். ஒட்டுச்செடியா நடுறது நல்லது. சாதாரண செடியா இருந்தா ஒட்டுக் கட்டி விடணும். செடிகள்ல சில செடிகள் ஆண் செடியா இருக்கும். அந்தச் செடிகள் மகசூல் தராது. பெண் செடிகள்லயும் சில செடிகள் நல்லா காய்க்காது. அனைத்து செடிகளும் காய்க்கணும்னா கண்டிப்பா ஒட்டு கட்டணும். நடவு செஞ்ச செடிகள் 14 மில்லிமீட்டர் சுற்றளவுக்கு வந்தபிறகு ஒட்டு கட்டலாம். ஒட்டு கட்டிய 45வது நாள்ல, ஒட்டு கட்டுன இடத்துல இருக்குற பேப்பரைப் பிரிப்போம். அந்த சமயத்துல ஒட்டு கட்டுன இடத்தில இருந்து 2 அங்குலம் விட்டுட்டு செடியைக் கவாத்து பண்ணிடுவோம். அப்பதான் அந்த இடத்தில் இருந்து ஒட்டு கட்டிய செடியின் தன்மையோட புதுசா தழைஞ்சி வரும்.
ஒட்டு கட்டிய பிறகு 3 வருசத்துல செடியில காய்ப்பு வரும். இதுக்கு இடையில செடிகளுக்கு உரங்களைக் கொடுத்து ஊட்டம் ஏத்தணும். நான் முழுக்க இங்க ஆர்கானிக் உரங்களைத்தான் கொடுக்குறேன். மாட்டு எரு, ஆட்டு எரு, மட்கிய கோழி எரு இது மூனையும் கலந்து முதல் வருசத்துல செடிக்கு 20 கிலோ கொடுப்பேன். 2வது வருசத்துல செடிக்கு 40 கிலோ கொடுப்பேன். 3வது வருசத்துல 60லிருந்து 100 கிலோ வரை கொடுப்பேன். 7, 8 வருசத்துல செடிக்கு 200 கிலோ கொடுப்போம். அப்பதான் விளைச்சல் நல்லா இருக்கும். காய்கள் திரட்சியா இருக்கும். காய்ப்பு வரும்போது ஒவ்வொரு செடிக்கும் 2 லிருந்து 4 கிலோ வரைக்கும் எலும்புத்தூள் கொடுப்போம். அதேபோல அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோ டெர்மோ விரிடின்னு சில நுண்ணூட்ட உரங்களையும் கொடுப்போம். பொள்ளாச்சியைப் பொறுத்தவரைக்கும் ஜாதிக்காய்ல பெருசா நோய் எதுவும் வராது. பூச்சித்தொல்லையும் இருக்காது. இருந்தாலும் நாங்க முழுக்க இயற்கை முறையில பராமரிப்பு பண்றதால வேற எதுவும் பெருசா பிரச்சினை வராது. 3 வருசத்து செடிகளுக்கு 1 லிட்டர் அமிர்தக்கரைசல் கொடுப்போம். அதுக்கப்புறம் இந்தக் கரைசலை 2 லிட்டர் கொடுப்போம். இதுல மீன் அமிலம், பஞ்சகவ்யமும் கொடுக்குறோம். இளஞ்செடிகளுக்கு மாசம் ஒருமுறையும், வளர்ந்த செடிகளுக்கு 3 மாசத்துக்கு ஒருமுறையும் தெளிக்கிறோம்.
இப்படி பராமரிக்கும்போது 3 வருசத்துல செடிகள்ல காய்ப்பு ஆரம்பிக்கும். 2 நாளுக்கு ஒருமுறை வயலைச் சுற்றிச் சுற்றிப் பார்க்கணும். வெடித்த காய்களா இருந்தா உடனே அறுவடை பண்ணிடணும். பதமான காய்களையும் அறுவடை செய்வோம். அதை கொட்டை தனியா, பத்திரி தனியா பிரிச்சி பதப்படுத்துவோம். முதல் முறையா காய்க்கும்போது ஏக்கருக்கு 15-20 கிலோ கொட்டை மகசூலாக கிடைக்கும். அதுல 25 சதவீதம் பத்திரி கிடைக்கும். அதாவது 5 கிலோ பத்திரி கிடைக்கும். வருசா வருசம் காய்ப்பு அதிகரிச்சிக்கிட்டே போகும். 6, 7 வருசத்துல நல்ல காய்ப்பு இருக்கும். இப்போ மரத்துக்கு 10 கிலோ கொட்டை மகசூல் கிடைக்குது. 10 வருசத்துல 1 மரத்துக்கு 7 கிலோ கொட்ைட, 2 கிலோ பத்திரி கிடைக்கும்.
காற்று, மழை உள்ளிட்ட காரணங்களால் சில செடிகள் சேதம் ஆகிடுச்சி. இதனால் புது செடிகள் வச்சிருக்கேன். இருந்தாலும் 250 செடியில இருந்து நல்ல மகசூல் கிடைக்குது. ஜாதிக்காய் பெரும்பாலும் ஜூலை மாசத்துல இருந்து அக்டோபர் மாசம் வரைக்கும் காய்ப்பு கொடுக்கும். இந்த 4 மாசம்தான் காய்ப்பு. போன வருசம் கொட்டை, பத்திரி மூலமா 11 லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சிது. செலவு 4 லட்சம் போக 7 லட்ச ரூபாய் லாபம் கிடைச்சது. மரங்கள் இன்னும் பெருக்க பெருக்க லாபமும் அதிகரிக்கும். இதனாலதான் நாங்க ஜாதிக்காயைத் தொடர்ந்து சாகுபடி பண்றோம்’’ என புன்னகையுடன் கூறி முடிக்கிறார் சபாபதி.
தொடர்புக்கு:
சபாபதி – 98427 68711.
ஜாதிக்காயை அறுவடை செய்தபிறகு பதப்படுத்துவது முக்கியம். அறுவடை செய்தவுடன் கொட்டை தனியாகவும், பத்திரி தனியாகவும் பிரித்தெடுக்க வேண்டும். அதன்பிறகு 15 நாள் நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு வெயிலில் 1 வாரம் முதல் 10 நாள் வரை உலர்த்த வேண்டும். பத்திரியை வெயிலில் அதிகமாக உலர்த்தக்கூடாது. அவ்வாறு உலர்த்தினால் தரம் குறைந்துவிடும். இதனால் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இதை உலர்த்த வேண்டுமாம்.
கேரளத்து ஜாதிக்காயை விட பொள்ளாச்சியில் விளையும் ஜாதிக்காய்க்கு மவுசு ஜாஸ்தி. இதனால் கூடுதல் விலையும் தருகிறார்கள் வியாபாரிகள். பொள்ளாச்சி ஜாதிக்காயில் 9-10 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது. இதனால் இதை அப்ளாக்சின் என்ற பூஞ்சாணம் தாக்குவதில்லை. இந்தப் பூஞ்சாணம் தாக்காத ஜாதிக்காயே வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரளா ஜாதிக்காய்க்கு ஈரப்பதம் கூடுதலாக இருப்பதால் பூஞ்சாணத்தாக்குதல் இருக்கும். இதனால் விலை கம்மியாம்.
கடந்த ஆண்டு சபாபதிக்கு கிடைத்த கொட்டை மகசூல் 1900 கிலோ. அதை கிலோ ரூ.360 என விற்பனை செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 84 ஆயிரம் வருமானம் கிடைத்திருக்கிறது. 180 கிலோ ஜாதிபத்திரி மகசூலாக கிடைத்திருக்கிறது. இதை கிலோ ரூ.2,560 என விற்பனை செய்ததன் மூலம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்து 800 வருமானம் கிடைத்திருக்கிறது. பராமரிப்பு, ஆள் கூலி என ரூ.4 லட்சம் செலவு போக சுமார் 7.4 லட்சம் லாபம் கிடைத்திருக்கிறது.