சென்னை: நாடாளுமன்றம் வருகிற 18ம் தேதி கூடுவதால், தென் மாநில தலைவர்களுடன் பாஜக இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவு கேட்கின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி, ஜெகன்மோகன் ரெட்டி, குமாரசாமி ஆகியோரை டெல்லிக்கு அழைத்து ஆதரவு கேட்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் ஆளுங்கட்சியான பாஜக தனது பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை இலக்கு வைத்து களப்பணியை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பாஜவை வீழ்த்தும் வகையில் எதிரணியினர் ஓரணியில் திரண்டுள்ளனர். இதற்காக எதிர் அணியினர் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றனர். அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் எதிரணியினரின் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது அவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேகத்தில் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான தேர்தல் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். இதற்காக வியூகங்களை வகுத்து செயல்படுத்த கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் செய்த சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து சென்று விளக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து கூறி பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் பாஜ தலைமையிலான கூட்டணியில் அதிமுக இடம் பெற்றுள்ளது. அவர்கள் பாஜவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை பாஜக வருகிற 18ம் தேதி கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தை தேர்வு செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமர் நியமிக்கும் அமைச்சரை சேர்ப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தவிர ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டுவருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்தநிலையில் இந்தியா கூட்டணியை உடைக்கும் நடவடிக்கையை பாஜக தொடங்கியது. ஆனால் கூட்டணியை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் தென் மாநிலங்களில் பாஜக தேய்பிறையாகவே உள்ளது. இதனால் கட்சியை வளர்க்கவும், கூட்டணி அவசியம் என்பதை உணர்ந்த தலைவர்கள், தென் மாநிலங்களில் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கர்நாடகாவில் குமாரசாமியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தனித்துப் போட்டியிட்டாலும் பாஜக ஆதரவுநிலையில் உள்ளார்.
இதனால் குமாரசாமி, ஜெகன்மோகன் ரெட்டி, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை டெல்லிக்கு அழைத்து நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வரும் தீர்மானத்தை கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு தரவேண்டும் என்று பாஜக கோரிக்கை வைப்பதற்காக அவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளது. அதற்காகத்தான், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.5 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் பிற்பகல் 1.10 மணியளவில் டெல்லிக்கு வந்தார். டெல்லியில் தங்கியுள்ள அவர் இன்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜ தேசிய தலைவரையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் மாநாட்டில் ஜே.பி.நட்டா பங்கேற்றுள்ளார். இதனால், அவரை சந்திக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை மாநாடு முடிந்து டெல்லி திரும்பும் பட்சத்தில் இன்று இரவு ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்புள்ளது.
அமித்ஷா, ஜே.பி.நட்டாவுடன் எடப்பாடி சந்திப்பின் போது வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வரும் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவு கேட்கிறார் அமித்ஷா. தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, குமாரசாமி, ஜெகன் ஆகியோர் ஆதரவு தரும்நிலையில்தான் உள்ளனர். வழக்கமாக செல்வாக்கான தலைவர்களாக இருந்தால் டெல்லியில் இருந்து அந்தந்த மாநிலங்களுக்கு வந்து ஆதரவு கேட்பார்கள். ஆனால் தற்போது நிலை அப்படி இல்லை என்பதால், அவர்களை டெல்லிக்கு அழைத்து ஆதரவு கேட்கும்நிலையில் பாஜக உள்ளது. இதனால் மாநிலக் கட்சிகளும் பயந்து டெல்லி சென்று ஆதரவு வழங்கும்நிலையில் உள்ளதால் ஆதரவு தெரிவிக்க அவர்கள் டெல்லி செல்கின்றனர் என்கிறார் அதிமுக மூத்த தலைவர் ஒருவர்.