திருமலை: ஆந்திராவில் இளம் நடிகராக திகழ்பவர் பிரபாஸ். ‘பாகுபலி’ உள்ளிட்ட பான் இந்தியா வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றவர். இவரையும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனின் தங்கையும், தற்போதைய மாநில காங்கிரஸ் தலைவருமான ஷர்மிளாவையும் தொடர்பு படுத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு வதந்தி பரவியது. இந்நிலையில் இந்த விவகாரத்தை ஒய்எஸ்ஆர் காங்கிரசார் மீண்டும் கிளப்ப விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ஷர்மிளா கூறுகையில், எனக்கும் பிரபாசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என எனது பிள்ளைகள் மீது சத்தியம் செய்து சில ஆண்டுகளுக்கு முன்பே மறுப்பு வெளியிட்டேன்.
நடிகர் பாலகிருஷ்ணாவின் ஐபி முகவரி மூலம் அந்த பதிவு செய்யப்பட்டதாக நான் குற்றம்சாட்டினேன். ஜெகன்மோகனின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பாலகிருஷ்ணா மீது ஏன் விசாரணை நடத்தவில்லை? அரசியல் மாற்றத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் பிரச்னையை மீண்டும் ஓய்எஸ்ஆர் காங்கிரசார் கிளறுவதற்கு ஜெகன்மோகன் தான் காரணம். சொந்த தங்கையை வீழ்த்த தமது கட்சியினரை கொண்டு ஜெகன்மோகன் கீழ்த்தரமான செயலை செய்கிறார். ஆனால் அனைத்தையும் செய்துவிட்டு ஆளுங்கட்சியுடன் சேர்ந்து நான் சதி செய்வதாக என் மீது குற்றம்சாட்டி ஜெகன்மோகன் கபடநாடகம் ஆடுகிறார், என்றார்.