*திருப்பதி எம்எல்ஏ பேட்டி
திருப்பதி : ஜெகன்மோகனை வெற்றி பெறுவேன் என்று சந்திரபாபு பேசுவது கேலிக்கூத்தானது என திருப்பதி எம்எல்ஏ கருணாகர் கூறினார். திருப்பதி 19வது வார்டு பகுதியில் நேற்று நடந்த வீட்டுக்கு வீடு உங்கள் அரசு நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ கருணாகர் கலந்து கொண்டார். அப்போது, அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று மாநில அரசின் நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகள் குறித்து பிரசுரங்களை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆந்திர மாநில மக்களின் இதயங்களில் நமது முதல்வர் ஜெகன்மோகன் குடி கொண்டுள்ளார்.
அவரின் நவரத்தினா திட்டங்கள் மூலம் அனைத்து மக்களும் பல்வேறு விதமான நற்பலன்களை அடைந்து உள்ளார்கள். இதனால் அவரின் செல்வாக்கு மக்களிடம் அதிகரித்து உள்ளது.
இதனைக் கண்டு பொறாமைப்படும் தெலுங்கும் தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, அரசு குறித்து அவதூறு பரப்பி வருகிறார். இதனை மக்கள் கண்டு கொள்ளவில்லை.
ஜெகன்மோகனை அவருடைய தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற போவதாக சந்திரபாபு பேசிய பேச்சு விந்தையாகவும் கேலிக்கூத்தாகவும் உள்ளது. மக்களின் சமூக ஆதரவு பெற்ற முதல்வர் எங்கே, அனைத்து தேர்தலிலும் தோல்வியுற்று வரும் சந்திரபாபு எங்கே. வரும் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஜெகன்மோகனே வருவார். இவ்வாறு அவர் கூறினார்.