சென்னை: ஜெகத்ரட்சகன் எம்பி வீட்டில் நடந்த சோதனை பாஜ அரசின் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பா.ஜ. அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது. ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்கின் கைதும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் இல்லத்தில் நடந்த சோதனைகளும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை ஒன்றிய பா.ஜ. அரசு எப்படி அரசியல் நோக்கத்துடன் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதற்கான தெள்ளத்தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான இத்தகைய திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். அமலாக்கத்துறை வெளிப்படைத்தன்மையோடும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதை பா.ஜ. வசதியாக மறந்துவிடுகிறது. ஆனால், சட்டத்தையும் மக்களாட்சியையும் துச்சமாக மதித்துச் செயல்படுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடையே தொடர்ந்து வளர்ந்து வரும் ஒற்றுமையைக் கண்டு பா.ஜ. அஞ்சி நடுங்குவது இதன் மூலம் நன்கு தெரிகிறது. பழிவாங்கும் நடவடிக்கைகளை விடுத்து உண்மையான பிரச்னைகளைத் தீர்க்க அவர்கள் கவனம் செலுத்துவது நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.