தூத்துக்குடி : பிரபல ரவுடி பிளாக் ஜாக்குவார் ஜேக்கப்பின் கூட்டாளி போலீசின் பிடியில் இருந்து தப்பிச் சென்றபோது தவறி விழுந்ததில் இடது கை முறிந்தது. தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் விஜயகுமார் என்ற ஒன்றரை விஜி (24). இவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை பிரபல ரவுடியான பிளாக் ஜாக்குவார் என்ற ஜேக்கப்பின் கூட்டாளி ஆவார். விஜயகுமார் மீது நெல்லை மாவட்டம் பாளையில் கொலை வழக்கு, தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ஜோன் என்பவரை கொல்ல முயற்சி செய்த வழக்கில் தென்பாகம் போலீசார் விஜயகுமாரை தேடி வந்தனர். கடந்த 5 மாதங்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தென்பாகம் போலீசார் முத்தமிழரசன், ஏட்டுகள் முத்துராஜ், சரவணன், சமியுல்லா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று தூத்துக்குடியில் பதுங்கியிருந்த விஜயகுமாரை மடக்கினர்.
அப்போது போலீசாரின் பிடியில் இருந்து விஜயகுமார் தப்பியோடினார். அங்குள்ள ஒரு பாலத்தில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது கை முறிந்தது. போலீசார் அவரை கைது செய்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட போலீஸ் பிடியில் இருந்து இதேபோல தப்பியோடிய விஜயகுமார் தவறி விழுந்ததில் வலது கையில் முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.