‘‘கட்சி சம்பந்தமான பொறுப்பை நெருங்கிய உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு எல்லா விஷயங்களையும் ரகசியமாக கண்காணிக்கிறாராமே மாஜி அமைச்சர் தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சிய மாவட்ட இலை கட்சியின் மாஜி அமைச்சர் வைத்தியானவர் தேனிக்காரர் அணியில் இருந்து வருகிறார். தற்போது ‘விட்டமின் ப’ உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை தனது நெருங்கிய உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளாராம்.. அந்த உறவினர் தான் தற்போது அனைத்தையும் கவனித்து வருகிறாராம்… கட்சி சம்பந்தப்பட்ட முக்கிய வேலைகளை திரைமறைவில் செய்து வருகிறாராம்.. டெல்டா மாவட்டத்தில் இலை கட்சியில் நடந்து வரும் பனிப்போர், அதிருப்தி உள்ளிட்ட விஷயங்களையும் ரகசியமாக கவனிச்சிட்டு இருக்கிறாராம்.. அதிருப்தியில் உள்ளவர்களை ‘விட்டமின் ப’ கொடுத்து தங்கள் வசம் இழுக்கவும் அவர் திட்டமிட்டு இருக்காராம்.. தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த உறவினர் ரொம்ப சிம்ப்ளாக நடந்து கொள்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பலாப்பழக்காரர் விஷயத்துல சேலத்துக்காரர் மனசு மாறிவிடக்கூடாது என்பதில் ஹனிபீ மாவட்ட நிர்வாகிகளே பிடிவாதமாக இருக்காங்களாமே எதற்காம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒரு பக்கம் பலாப்பழக்காரர் மீண்டும் இலைக்கட்சியில் ஐக்கியமாக என்னென்னமோ பேசிப் பார்க்கிறாரு… தூது விட்டு வருகிறார். ஆனாலும், அவரது பேச்சை சிலர் மடை மாற்றி விட்டு, சேலத்துக்காரர் தவறியும் மனது மாறி விடக்கூடாது என ஹனிபீ மாவட்டத்தில் பிடிவாதமாக இருக்கின்றனராம்.. பலாப்பழக்காரர் ஊரில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், நானே சீனியர் எனக்கூறி, பலாப்பழக்காரரை சேலத்துக்காரர் பிய்த்து உதறி விட்டார். ஆனாலும், இலைக்கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள சிலரோடு, பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் ரகசியமாக பேச்சு நடத்தி, ஒன்றிணைந்தால் பலம் என்பது போல பேசி வர்றாங்களாம்.. ஒரு சிலர், ‘பேசாம இணைந்தால் என்ன’ என்ற ரீதியில் பேச ஆரம்பிக்க, சிலர் குறுக்கே பாய்ந்து, ‘அவர் மாவட்டத்தையே தன் கைக்குள் வச்சிருந்தபோது, நீ, நான் எல்லாம் எங்கே இருந்தோம். நமக்கு ஏதாவது நன்மை செஞ்சிருப்பாரோ? அவர் பெயரை சொல்லி சிலர் மட்டும்தான் பயங்கரமா சம்பாரிச்சாங்க.. இப்ப கட்சி ஒன்றிணைந்தால் நம்மளை எல்லாம் பழையபடி செல்லாக்காசு ஆக்கிருவாரு… அவரது ஆதரவாளர்கள் கைதான் ஓங்கும்.. ஆட்சிக்கு வந்தால் என்ன, வராட்டி நமக்கு என்ன? பேசாம பதவியை என்ஜாய் பண்ணிட்டு, போய்ட்டே இருக்கணும்’ என்றரீதியில் பேசிக் கொண்டுள்ளனராம்.. இதென்ன இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள், விழிபிதுங்க முழிக்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நீண்ட கால நெருக்கமாக இருந்த மாவட்ட செயலளார் இறந்ததற்கு கூட புதிய கட்சி நடிகர் அனுதாபம் தெரிவிக்காதது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நடிகரின் புதிய கட்சியில் சாயம் வெளுத்துப் போய் கிடக்கு.. ஒரு கட்சியின் தலைவர் என்றால் தொண்டர்கள், நிர்வாகிகளை மதித்தால்தான் கட்சி நடத்த முடியும். கட்சி வளரும். நடிகர் ஆரம்பித்த கட்சிக்கு மாநாடு நடத்திய போது, அந்த மாநாட்டிற்கு சென்றவர்கள் வழியில் விபத்தில் இறந்து விட அவர்களை கட்சி தலைவர் நடிகர் எட்டிக் கூட பார்க்கவில்லை என அப்போது புகார் எழுந்தது. தற்போது அதே புகைச்சல் தென் மாவட்டத்திலும் கிளம்பியிருக்கு.. அதாவது அல்வா மாவட்டத்தில் நடிகர் கட்சியின் இரண்டு எழுத்து மாவட்ட செயலாளர் சென்னைக்கு நடிகரை சந்திக்க சென்றாராம்.. எதிர்பாராத விதமாக அவர் தலைநகரில் உயிரிழந்து விட, அவரது உடல் அல்வா மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த இரண்டு எழுத்து மாவட்ட செயலாளர் நடிகருடன் நீண்டகாலமாக மிகவும் நெருக்கமாக இருந்தவராம்.. எனவே நடிகர் எப்படியும் அஞ்சலி செலுத்தவாவது அல்வா மாவட்டத்திற்கு வருவார் என அவரது கட்சியினர் ரொம்பவே எதிர்பார்த்தனராம்.. ஆனால் புஸ்ஸை மட்டும் அனுப்பி வைத்து விட்டாராம் நடிகர்.. அது மட்டுமல்லாது கட்சியின் மாவட்ட செயலாளர் இறந்ததற்கு கட்சித் தலைவர் என்ற முறையில் அனுதாபத்தை கூட தெரிவிக்கவில்லையாம்.. இறந்த மாவட்ட செயலாளர் குடும்பத்தினர் தற்போது நிர்கதியாய் உள்ள நிலையில் நடிகர் இதுவரை உதவி கூட செய்யவில்லையாம்.. இது நடிகர் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்காம்.. இதெல்லாம் புதிதாக கட்சி தொடங்குபவர்களுக்கு தெரியுமா என்ன?..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பித்தாலும் தலைக்கு இவ்வளவு கொடுத்தாகணும் என கண்டிஷன் போட்ட அதிகாரி மீது விசாரணை நடக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்டத்தில் நீர் வளத்துறை உதவி பொறியாளர் ஒருவர் வேலையில செலுத்துற கவனத்தை விட கரன்சி குவிப்பதிலேயே முழு கவனமா இருக்கிறாராம்.. கடந்த சில மாதங்களுக்கு முன் வாய்க்கால் கரையையொட்டி குழாய்கள் அமைத்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக அனுமதி கேட்டு விவசாயிகள் சிலர் விண்ணப்பித்தார்களாம்.. பல நாட்களாகியும் அந்த விண்ணப்பம் மேல எந்த நடவடிக்கையும் எடுக்காம அதிகாரி கிடப்பில் போட்டுவிட்டாராம்.. வேற வழி தெரியாம விண்ணப்பம் செய்த விவசாயிகள் எல்லாம் ஒன்று கூடி உதவி பொறியாளரை ஆபீஸில் போய் சந்திச்சு அனுமதி கொடுங்கன்னு கேட்டு இருக்காங்க.. ஒவ்வொருவரும் தலா ரூ.50 ஆயிரம் தந்தால்தான் அனுமதி தர முடியும்னு கன்டிசனா சொல்லிட்டாராம்.. விவசாயிகள் பணம் கொடுக்க முடியாது. எங்களுக்கான உரிமையைதானே கேட்கிறோம்ன்னு சொல்லி இருக்கிறாங்க.. நீங்க அனுமதி தரலைன்னா உங்களோடு உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம்ன்னு சொன்னதற்கு, நான் வாங்கும் தொகையில் பெரும் பங்கு அவங்களுக்குதான் போகுது.. தாராளமா போய் புகார் கொடுங்கன்னு பதில் சொன்னாராம்.. இதனால பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரை நேரடியா சந்திச்சு அதிகாரி மேல புகார் சொல்லி இருக்காங்க.. இது தொடர்பாக இப்ப விசாரணை நடந்துகிட்டு இருக்குதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
பலாப்பழக்காரர் விஷயத்தில் சேலத்துக்காரர் மனசு மாறிடக்கூடாது என நிர்வாகிகள் பிடிவாதமாக இருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0
previous post